கவர்னர்-பிரதமர் சந்திப்பு யாருக்கு என்ன பயன்? - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Tuesday, 3 April 2018

கவர்னர்-பிரதமர் சந்திப்பு யாருக்கு என்ன பயன்?

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், டில்லியில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன், தமிழக கவர்னர் நடத்திய ஆலோசனையில், மிக முக்கிய விஷயம் இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக, தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் பரபரப்பான சூழ்நிலையில், தலைநகர் டில்லிக்கு வந்திருந்த, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், நேற்று மதியம் பார்லிமென்ட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார்.

புதிய உறுப்பினர்கள் பதவியேற்றதால், ராஜ்யசபாவில் இருந்து, சற்று தாமதமாக வந்த, பிரதமர் நரேந்திர மோடியை, கவர்னர் சந்தித்துப் பேசினார். 15 நிமிடங்கள் நீடித்த, இந்த சந்திப்புக்கு பின், மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கையும், தனியாக சந்தித்துப் பேசினார்.

பல முறை, எம்.பி.,யாக இருந்தவர் என்பதால், பார்லிமென்ட்டின் ஒவ்வொரு இடமும், கவர்னருக்கு அத்துபடி. எனவே, தன்னுடன் வந்த தமிழ்நாடு இல்ல உதவியாளர்களை அனுப்பி விட்டு, தான் மட்டும், மைய மண்டபத்திற்குள்,

நுழைந்தார். அங்கு நின்றிருந்த, அ.தி.மு.க., - எம்.பி., வேணுகோபால், கவர்னரை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், சுதாரித்தபடி, கவர்னருக்கு, அவர் வணக்கம் வைக்க, அங்கேயே இருவரும் அமர்ந்துவிட்டனர். சற்று நேரத்தில், தமிழக எம்.பி.,க்கள் பலரும் அங்கு சூழ்ந்துவிட்டனர்.

கவர்னருடன், ஒவ்வொரு, எம்.பி.,யும், புகைப்படம் மற்றும், 'செல்பி' எடுத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்களிடம், ''தமிழ், இனிமையான மொழி; தமிழகத்தை மிகவும் நேசிக்கிறேன்,'' என, தனக்கு தெரிந்த, கொஞ்சும் தமிழில் பேசி, கவர்னர் அசத்தினார்.

இதன்பின், கவர்னரிடம் செய்தியாளர்கள், 'தங்கள் பயணம் குறித்து, ஏதாவது கூற விரும்புகிறீர்களா...' என, கேட்டதற்கு, ''சொல்வதற்கு எதுவுமில்லை,'' என, கூறிவிட்டு கிளம்பினார்.

பதவி நீக்கம்:

தமிழக கவர்னரின் டில்லி வருகை குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: இது, திடீர் பயணம் இல்லை. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம், முன் கூட்டியே, தேதி கேட்டு வாங்கி நடந்த சந்திப்புகள் இவை. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து, மத்திய அரசுக்கு ஏற்கனவே தகவல்கள் வந்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்ததால், கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தமிழகத்தில் நிலவும், சட்டம் - ஒழுங்கு நிலவரங்கள் ஒருபுறம் இருந்தாலும், விவகாரம், தற்போது சுப்ரீம் கோர்ட் வசம் உள்ளது. எனவே, அங்கிருந்து

ஒரு முடிவு வந்தபின் தான், இதன் அடுத்த கட்டம் குறித்து, நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சந்திப்பில், 18 எம்.எல்.ஏ.,க்கள், பதவி நீக்க விவகாரம் தான், முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களமே, மிகவும் உற்று நோக்கி எதிர்பார்க்கும் விஷயம் இது. விசாரணை முடிந்து, தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதே தற்போதைய நிலை. 'எம்.எல்.ஏ.,க்களை நீக்கியது செல்லாது' என, தீர்ப்பு வந்தால், அரசியல் சூழ்நிலை, கொதிநிலையை எட்டலாம்.

அந்த தீர்ப்பின் விளைவு, எப்படி இருக்கும்; அப்போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் பற்றி, நேற்று விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன், கவர்னர் நடத்திய ஆலோசனையின் தாக்கம், விரைவில், தமிழகத்தில் எதிரொலிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

Post Top Ad