பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கியமான டிப்ஸ் - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Friday, 2 March 2018

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கியமான டிப்ஸ்


“ஒன்பதாம் வகுப்பு வரை மூன்று பருவத்தேர்வாக (Summative Assessment Exams) எதிர்கொண்ட மாணவர்கள், முதல் முறையாகப் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர். 
இதுவரை ஒவ்வொரு பருவத்தில் உள்ள பகுதியை மட்டுமே படித்துத் தேர்வு எழுதி வந்தனர். பத்தாம் வகுப்பில் முழுப் புத்தகத்தையும் படித்துத் தேர்வுக்குத் தயாராக வேண்டும். ஒன்பதாம் வகுப்பு வரை இரண்டு மணி நேரம் மட்டுமே தேர்வு எழுதியவர்கள், முதல்முறையாக இரண்டரை மணி நேரம் தேர்வை எழுத வேண்டும்.

தேர்வு என்றால், கேள்வித்தாளையும் விடைத்தாளையும் ஒரே நேரத்தில் வழங்குவது வழக்கம். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதலில் வினாத்தாளை மட்டும் கொடுத்து, கேள்வித்தாளைப் படித்துப்பார்க்க 15 நிமிடங்கள் தருவார்கள். வினாத்தாளைப் படித்துக்கொண்டிருக்கும்போதே விடைத்தாள் வழங்கப்படும். 

விடைத்தாளின் முதல் பக்கத்தில் மாணவரின் பதிவெண், புகைப்படம் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இது முதல் பகுதி. இதை டாப் ஷீட் (Top Sheet) என்றும் முதன்மைத்தாள் என்றும் குறிப்பிடுவார்கள். மாணவர் குறித்த விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பின்பு, கேள்வித்தாளின் எண்ணையும் மாணவரின் கையொப்பமும் இட வேண்டும். இதனை விடைத்தாளில் இருந்து பிரித்து எடுத்துவிடுவார்கள். இதற்கு அடுத்துள்ள பக்கங்களில் விடை எழுத வேண்டும். 

விடை எழுதும் பக்கங்களில் மாணவர் குறித்து எந்தத் தகவலும் இருக்காது. இது, தேர்வுத்தாளைத் திருத்துபவர்களுக்குத் தேர்வு எழுதியவர் குறித்து எந்த விவரமும் தெரியக் கூடாது என்பதற்காகச் செய்யப்படுகிறது. தேர்வுத்தாளைத் திருத்திய பின்பு, பார்கோடு (Barcode) முறையில் மதிப்பெண் பதிவு செய்யப்படும். இதனால், எந்தவிதமான முறைகேடும் செய்ய முடியாது. ஒவ்வொரு கேள்விக்கு விடை எழுத குறிப்பிட்ட இடம் வழங்கப்படும். அந்த இடத்தில் மட்டும் விடை எழுத வேண்டி இருக்கும். கூடுதல் பக்கங்கள் எதுவும் இணைக்கப்பட வேண்டிய அவசியமில்லை. 

ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள் 60 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுதி இருக்கின்றனர். பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதுபவர்கள், அறிவியலைத் தவிர இதர பாடங்களில் 100 மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுத இருக்கின்றனர். அறிவியல் பாடத்துக்குச் செய்முறை தேர்வுக்காக 25 மதிப்பெண்ணும் எழுத்துத்தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

இதுவரை பதினொன்றாம் வகுப்புத் தேர்வு என்பது மூன்று மணி நேரம் நடந்துவந்தது. முதல்முறையாக இரண்டரை மணி நேரத்துக்கு மாறி இருக்கிறது. பதினொன்றாம் வகுப்பில் வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்களின் தேர்வுகள் 70 மதிப்பெண்ணுக்கும் செய்முறை இல்லாத தேர்வுகள் 90 மதிப்பெண்ணுக்கும் தேர்வு எழுத உள்ளனர். 

முதன்மை விடைத்தாளில் பார்கோடு இணைந்திருக்கும் வகையில் நவீனமுறையில் வழங்கியிருக்கின்றனர். நம்முடைய புகைப்படத்தைப் போட்டிருக்கிறார்களே என்று அதைப் பார்த்துக்கொண்டிருக்காமல் தேர்வு எழுதுவதில் கவனம் செலுத்த வேண்டும். 

எந்த மீடியத்தில் இதுவரை படித்தார்களோ அந்த மீடியத்தில் மட்டுமே கேள்வித்தாள் இருந்திருக்கும். முதல்முறையாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் கேள்விகள் இருக்கும். 

இதற்குமுன்பு, ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியே தேர்வு நடந்து வந்தது. தற்போது, முதல் நாளில் பன்னிரண்டாம் வகுப்பு, அடுத்த நாளில் பதினொன்றாம் வகுப்பு, அதற்கு அடுத்தநாளில் பத்தாம் வகுப்பு என மாறி மாறித் தேர்வு நடக்கவிருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 20 தேதி வரை நடக்க இருக்கிறது. இதனால், ஒவ்வொரு தேர்வுக்கும் நிறையக் கால இடைவெளி இருக்கிறது. என்றைக்குத் தேர்வு நடைபெறுகிறது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளத் தேர்வு அட்டவணையை பிரின்ட் எடுத்துப் படிக்கும் இடத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும். ஆல் தி பெஸ்ட்!

வெற்றி உங்களுக்கே.....


கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஆயிஷா இரா. நடராசன். 

No comments:

Post a Comment

Post Top Ad