ஒரு ஜான் வயிறு - என்னதான் செய்ய வேண்டும்? - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Monday, 19 March 2018

ஒரு ஜான் வயிறு - என்னதான் செய்ய வேண்டும்?

‘பசி’ என்ற உணர்வு இல்லையென்றால், உலகில் யாரும் உழைக்க மாட்டார்கள். பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பசியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான 10 தகவல்களை இங்கு பார்க்கலாம்.

நேரத்துக்குச் சாப்பிட வேண்டாம்!

எப்போது உணவு தேவையோ அந்த நேரத்தில், வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும். அந்த நேரத்தில் சாப்பிட்டால்தான், உணவு முழுமையாக செரிமானமாகி சத்துகளை உடல் கிரகிக்க முடியும். பசி உணர்வு இல்லாதபோது சாப்பிட்டால் இந்தச் செயல்பாடு முறையாக நடக்காது. எனவே, நேரத்துக்குச் சாப்பிடுவதை விட, பசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவதே நல்லது.

செரிமானத்துக்கு உடல் எப்படி தயாராகும்?

எப்போது நமக்குப் பசி வந்து, சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ அப்போதே செரிமானத்துக்கான பணிகள் ஆரம்பித்துவிடும். அதாவது, என்ன சாப்பிடப் போகிறோம் என்று திட்டமிடுவதில் தொடங்கி, அந்த உணவைப் பார்ப்பது, நுகர்வது, சுவைப்பது என உணவு வயிற்றுக்குள் போகும் முன்னரே அந்த உணவின் இலகுவான தன்மையைப் பொறுத்து செரிமானத்துக்கு உடல் தயாராகிவிடும்.

ஒருவரால் அதிகப்பட்சம் எவ்வளவு சாப்பிட முடியும்?

குண்டாக இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது. அது உண்மையல்ல. ஒருவரின் உடல் அமைப்பைப் பார்த்து, அவர் எவ்வளவு சாப்பிடுவார் என்று தீர்மானிக்க முடியாது. உடல் அமைப்புக்கும் உணவின் அளவுக்கும் சம்பந்தமில்லை. ஒருவர், தொடர்ச்சியாக அதிகம் சாப்பிட்டு வந்தால், நாளடைவில் இரைப்பையின் அளவு, தானாகப் பெரிதாகி விடும். அதற்கேற்றார்போல் பசியும் உணவின் அளவும் அதிகரித்து விடும்.

பசியைத் தூண்டும் ஆற்றல் இனிப்புக்கு உண்டு!

உணவு சாப்பிட்ட பின்னரும் கூட, இனிப்பைப் பார்த்தால், சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதைப் பலமுறை உணர்ந்திருப்போம். அதனால்தான், சாப்பாட்டை ஓர் இனிப்புடன் தொடங்கச் சொல்லிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இனிப்பு, பசியைத் தூண்டுவதோடு, உமிழ்நீரைச் சுரக்கவைத்து உணவு செரிமானமாகவும் உதவும்.

தூக்கமும் பசியும் இரட்டைப் பிறவிகள்!

தூக்கத்துக்கும் உண்ணும் உணவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. போதுமான அளவு தூங்காதவர்கள் அதிகமாகச் சாப்பிடுவார்கள். எனவே, போதுமான அளவுக்குத் தூங்குங்கள். உங்களை அறியாமலேயே நீங்கள் சரியான அளவில் உண்ணத் தொடங்கிவிடுவீர்கள்.

உங்கள் வயிறு சொல்வதைக் கேளுங்கள்!

வயிறு நிரம்பியவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். நீங்களாகப் பார்த்து, முதல்முறை தட்டில் எடுத்து வைத்துக்கொண்ட உணவே உங்களின் தேவைக்கான சரியான அளவு. எனவே, தட்டு நிறையச் சாப்பிட்டபிறகு, மீண்டும் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இது உடல் பருமனாவதில் இருந்து தப்ப உதவும்.

சாப்பிடும் முறையை மாற்றுங்கள்!

சுத்தம் கருதியோ ஃபேஷன் என்று நினைத்தோ ஸ்பூனால் உணவைச் சாப்பிடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இதனால், சாப்பிடும் உணவு எப்படிப்பட்டது என்பதை அறிந்து உணர்ந்து சாப்பிட முடியாது. உணவு, சூடானதா, குளிர்ச்சியானதா, இலகுவானதா, மொறுமொறுப்பாக இருக்கிறதா என்பதையெல்லாம் தொட்டு உணர்ந்து சாப்பிடுவது, சீரான செரிமானத்துக்கு உதவும்.

சும்மா இருந்தாலும் பசி ஏன்?

உடல் உழைப்பு இல்லாதபோதும் உடலின் சுவாச உறுப்புகள் ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருக்கும். அதேபோல, ரத்த ஓட்டம் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். உடல் இயக்கத்துக்கும் உணவு தேவை. எனவே, சும்மா இருந்தாலும் கண்டிப்பாகப் பசி வரும். அதைத் தடுக்க முடியாது.

அடிக்கடி பசியா?

பசி ஏற்படுவது இயற்கை. ஆனால், அது தகுந்த நேரத்தில் வந்தால்தான் ஆரோக்கியம். அடிக்கடிப் பசித்தால், சாப்பிடும் உணவில் குறையிருக்கலாம். குறிப்பாக, போதிய சத்துகள் இல்லாமல் இருக்கலாம் அல்லது பசியைத் தூண்டக்கூடிய செயற்கைச் சுவையூட்டிகள் அதிகம் சேர்ந்திருக்கலாம். ஏன், அடிக்கடிப் பசிப்பது தைராய்டு போன்ற நோய்களுக்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

கவலை மறக்க பிடித்த உணவைச் சாப்பிடுங்கள்!

அதிகமான டென்ஷன், கவலை, மனஅழுத்தம் போன்றவை இருந்தால், நீங்கள் விரும்பும் உணவு எதுவோ அதைச் சாப்பிடுங்கள். அதனால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும். அதேநேரத்தில், அதை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், உடல் எடை அதிகரித்துவிடும். டயட்டில் இருப்பவர்கள் இந்த விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது.

1 comment:

Post Top Ad