குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகள் - அறிவோம் - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Sunday, 18 March 2018

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகள் - அறிவோம்

children's kidney disease symptoms:



``சிறுநீரகப் பாதிப்புகள் மற்ற நோய் பாதிப்புகளைப்போலன்றி, அறிகுறிகள் இல்லாமலேயே ஏற்படக்கூடியவை. வேறு ஏதேனும் பரிசோதனை அல்லது சிகிச்சைக்காகச் செல்லும்போதுதான் பெரும்பாலானோருக்கு பாதிப்பு இருப்பதே தெரியவரும். அதிலும் குழந்தைகள் என்றால் அதிக அக்கறை தேவை”.
``குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போது எடுக்கும் ஸ்கேன் மூலம் சிறுநீரகத்தின் வளர்ச்சிக் குறைபாடு, சிறுநீரக அடைப்பு போன்ற பாதிப்புகளைக் கண்டறிய முடியும். சாதாரண பிரச்னையாக இருந்தால், பிறந்த பிறகு அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யலாம். சிறுநீரகப் பாதை வழியாகவே செலுத்தப்பட்டுக் கண்டறியும் யூரிட்ரோஸ்கோபி (Ureteroscopy), சிஸ்டோஸ்கோப் (cystoscope) போன்ற நவீனக் கருவிகள் வந்துவிட்டன.

சிறுநீர்ப் பாதையில் பிரச்னைகளுடன் சில குழந்தைகள் பிறக்­கின்றன. இதை போஸ்டீரியர் யுரித்ரல் வால்வ் அப்ஸ்ட்ரக்ஷன் (Posterior Urethral Valve Obstruction என்கிறார்கள். இதுபோன்ற குறைபாடுகளைக் கருவிலேயே கண்டுபிடித்துவிடலாம். குழந்தை பிறந்­ததும், கண்டுபிடித்து சிகிச்சையளிக்­கலாம்.

இது­போ­லவே சிறு­நீர், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்த்தாரைக்கு இறங்­காமல், மேல்பகுதிகளுக்கு ஏறு­வதும் குழந்­தை­க­ளுக்கு உண்டாகும் ஒரு பிரச்னைதான். அப்போது சிறுநீரில் ஏற்பட்டிருக்கும் தொற்று மேல்நோக்கிப் போவதுடன் அழுத்தமும் ஏற்படும். இதனால், சிறுநீரகம் செயலிழந்துபோக வாய்ப்புள்ளது. எக்ஸ்ரே, ஸ்கேன் மூலம் கண்டறிந்து, ஆரம்பநிலையில் இருந்தால் மருந்துகள் மூலம் சரிசெய்யலாம். முற்றியநிலையில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்.

நெப்ராட்டிக் சிண்ட்ரோம்
 (Nephrotic syndrome)

சிறுநீரில் அதிகளவு புரதம் வெளியாவதால் ரத்தத்தில் புரதச்சத்தின் அளவு குறையும். இந்த நிலைக்கு `நெப்ராட்டிக் சிண்ட்ரோம்’ என்று பெயர். அதாவது, சிறுநீரகத்தில் இருந்து ஒருநாளைக்குச் சராசரியாக 150 மி.கி அளவுக்கு மட்டுமே புரதம் வெளியேற வேண்டும். இதுதான் இயல்பான அளவு. இதைவிட அதிகமாக வெளியேறும்போது, கை,கால் வீக்கம், கண்களைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படும். ஒரு வயது முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் சிறுநீரின் அளவு குறைந்து சிறுநீரகம் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற பாதிப்புகள் வேறு வகை நோய்களாலும் ஏற்படலாம். எனவே, நோயின் தன்மையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டுகள் மூலம் இந்த நோய்களைக் குணமாக்கலாம். அதே நேரத்தில் வேறு சில நோய்களுக்கு இது பலனளிக்காது. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையே நிரந்தரத் தீர்வாக அமையும்.

நெப்ரைட்டிக் சிண்ட்ரோம்
(Nephritic Syndrome)


ரத்தம் சிறுநீரில் கலந்து வெளியேறுவது ‘நெப்ரைட்டிக் சிண்ட்ரோம்’ எனப்படும். சிலருக்கு சிறுநீரில் சிவப்பணுக்களும் புரதமும்கூட வெளியேறும். இந்தநோய் ஏற்பட்டால் குழந்தைகளின் முகம் வீங்கிவிடும்; ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சருமத்தில் புண்கள் ஏற்படுவதாலும், தொண்டையில் கிருமித்தொற்று காரணமாகவும் நெப்ரைட்டிக் சிண்ட்ரோம் ஏற்படும். நெப்ராட்டிக் மற்றும் நெப்ரைட்டிக் சிண்ட்ரோம் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் அல்லது மரபணுப் பிரச்னைகளால் ஏற்படக்கூடியவை.

சிறுநீரக நீர்க்கட்டி நோய்

சிறுநீரகத்தில் சிறுநீர்க்கட்டிகள் தோன்றுவதை ‘பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ (Polycystic kidney disease) என்கிறோம். இது மரபுரீதியாகச் சிலருக்கு சிறுவயதிலேயே வரும். ஆனால், வயதான பிறகுதான் இந்த நோயின் அறிகுறிகள் தெரியவரும். சிலருக்கு, சிறுநீரகத்தில் நீர்கோத்தல் பிரச்னை நாளடைவில் மிகப்பெரிய கட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது. பிற்காலத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யவேண்டியிருக்கும்.

சிறுநீர்ப்பை தொடர்பான நோய்

சிறுநீர்ப்பைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால், மூளைக்குச் செல்லும் தொடர்பு தடைபடும். இதற்கு ‘நியூரோஜெனிக் பிளாடர்’ (Neurogenic Bladder) என்று பெயர்.

பொதுவாக, படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஐந்தாவது வயதில் நின்றுவிடும். சிலருக்கு எட்டு வயது வரைகூட அது நீடிக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை இருந்தால், அது சிறுநீரகத் தொற்றால் ஏற்பட்டதா, மனம் சம்பந்தமான காரணங்களினாலா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், சிறுநீரகத்தில் பிரச்னை இருக்க வாய்ப்புண்டு. சிலருக்கு சிறுநீரகம் சுருங்கியிருக்கும். ஆனால், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வாந்தி வருவது என எந்த அறிகுறிகளும் தெரியாது. எனவே, வேறு எந்த நோய்களுக்காக மருத்துவமனைக்குச் சென்றாலும் ரத்த அழுத்தம், சிறுநீர்ப் பரிசோதனை போன்றவற்றைச் செய்துகொள்வது நல்லது. சிறுநீர் பிரிவதில் வேறு சிரமங்கள் எதுவும் இருந்தால் சிறுநீரகத்தை ஸ்கேன் செய்து பார்த்துவிடுவதும் நல்லது.

No comments:

Post a Comment

Post Top Ad