சரி, இந்தப் பிரச்னையைக் கண்டறிவது எப்படி? இதற்கான தீர்வுகள் என்னென்ன? இதில் பெண்கள் கவனம்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
மெனோபாஸ்
``இந்த ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’மை மருத்துவ உலகம் 'பெரிமெனோபாஸல் சிண்ட்ரோம்' என்றுதான் பார்க்கிறது. அதாவது, மெனோபாஸ் நிலையை அடைவதற்கு முன் இரண்டு முதல் ஐந்து வருடங்கள், மற்றும் மெனோபாஸ் நிலையை அடைந்த பிறகு இரண்டு முதல் ஐந்து வருடங்கள்... இதுதான் பெரிமெனோபாஸ் காலம். அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு நேரும் அவஸ்தைகளே ‘ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம்’.
பெரிமெனோபாஸ் பற்றிப் பேசுவதற்கு முன்னால், மெனோபாஸ் என்றால் என்னவென்று பெண்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாகச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன் சினைப்பையில் உற்பத்தி ஆகும். இதுதான் மாதவிடாய் ஏற்படுவதற்கான மிக முக்கியக் காரணி. பொதுவாக 45 வயதுக்கு மேல் இது சுரக்காமல் முற்றிலும் நின்றுபோவதால் பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடுவதே மெனோபாஸ் நிலை.
45 வயதைக் கடந்த சில பெண்களுக்கு இரண்டு, மூன்று, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படலாம். அது மெனோபாஸுக்கு முந்தைய நிலைதானே தவிர, அது மெனோபாஸ் ஆகிவிடாது. ஒரு பெண்ணுக்கு ஒரு வருடம்வரை முற்றிலுமாக மாதவிடாய் ஏற்படவில்லை என்றால் மட்டுமே, அதை மெனோபாஸ் என்று மருத்துவ உலகம் கணிக்கும்.
மெனோபாஸ் தரும் உடல், மனச் சிக்கல்கள்
மெனோபாஸ் ஏற்படுவதற்கு இரண்டு முதல் ஐந்து வருடங்களுக்கு முன்பு, மேலே சொன்னதுபோல ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை உண்டாகும். இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, படபடப்பு, மகிழ்ச்சி, கோபம் என்று மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், மற்றும் உளவியல் சார்ந்த பிரச்னைகள், மன அழுத்தம் என்று இந்தக் காலகட்டத்தில் பெண்கள் அதிகளவில் பிரச்னைகளைச் சந்திப்பார்கள். கூடவே, அலுவலகத்தில் வேலைப்பளு, குடும்ப நிர்வாகம் என்று கூடுதலாகப் பொறுப்புகளும், அழுத்தங்களும் தாக்க ஆரம்பிக்க, 40 வயதைத் தாண்டிவிட்ட பெண்களில் பெரும்பாலானோர் உடல்ரீதியாக, மனரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
இனிப்புமீது ஏற்படும் ஈர்ப்பு
பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட நேரிடலாம். சிலர் அதிக ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது டென்ஷனில் தன்னை மறந்து அளவுக்கு அதிகமாகச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாகக் குறிப்பிட்ட சில உணவுப் பொருள்களின் மீதான அதீதத் தேடல்கள் தோன்ற ஆரம்பிக்கும். குறிப்பாக, இனிப்பு, அதிலும் சாக்லேட்மீது ஈடுபாடு அதிகரிக்கும். உடலில் மெக்னீஷியம் என்கிற தாதுவின் அளவு குறைவதால், இந்த உணர்வு ஏற்படும். சாக்லேட் சாப்பிடுவது உளவியல் சப்போர்ட் தருவதாக நம்மை உணர வைக்கும். அதனாலேயே இந்தச் சமயத்தில் பெண்கள் சாக்லேட்டை அதிகம் நாடுவார்கள். ஆனால், தொடர்ந்து அதிக அளவில் சாக்லேட் மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் ஆபத்து ஏற்படும். எனவே அதைத் தவிர்க்கவும், அதற்கு மாற்றாகவும், உடலில் மெக்னீஷியத்தின் அளவை அதிகரிக்க உதவும் பாதாம், வாழைப்பழம் போன்றவற்றை உண்ணலாம்.
அனைத்துப் பெண்களுக்கும் கவனம் அவசியம்
மெனோபாஸ் தவிர, `வேலை, வேலை’ என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் வேலை சார்ந்த மன அழுத்தம் மற்றும் உடல்சோர்வால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, பொதுவாக எல்லா வயதுப் பெண்களுக்குமே மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு வாரம் முன்பு, உடலில் சுரக்கும் புரொஜெஸ்ட்ரான் என்கிற ஹார்மோனின் அளவு உச்சத்தில் இருக்கும். அப்போது எரிச்சல் உணர்வு, மார்பகங்களில் இறுக்கம், வயிறு உப்புவது, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். கூடவே வேலைப்பளுவும் சேரும்போது அதனால் ஏற்படும் உடல், மன மாற்றங்களைப் பெண்கள் பலரால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மாதவிடாய் ஏற்படும் முதலாம் நாளில் இந்தப் புரொஜெஸ்ட்ரான் உச்சத்தில் இருந்து இயல்புக்குத் திரும்பிய பிறகே இவர்கள் நார்மல் நிலைக்கு வருவார்கள்.
சுயமதிப்பீடு முக்கியம்
ஒவ்வொரு மாதமும் உங்கள் உடல்நிலையை நீங்களே கண்காணியுங்கள். எப்போதெல்லாம் எரிச்சல், கோபம், மன அழுத்தம், படபடப்பு போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படுகின்றன என்பதை அறியுங்கள். ஒவ்வொரு முறையும் மாதவிடாய் ஏற்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு இப்படியான மாற்றங்கள் நிகழ்ந்து கடப்பது இயல்பாக இருந்தால் `ஓகே’. ஆனால், ஒருவேளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பிரச்னைகள் ஏற்பட்டால், அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள், கணவர், பிள்ளைகள் என யாரிடமாவது பகிர்ந்து அவரின் அரவணைப்பைப் பெறுங்கள். ஓரளவுக்கு இதமாக உணர்வீர்கள்.
35 வயதினிலே
ஒருவேளை இவற்றையெல்லாம் தாண்டி ஒவ்வொரு மாதவிடாய்க்கு முன்பும் உங்களது மனநிலையில், உடல்நிலையில் சமாளிக்க முடியாத அளவுக்குக் கடும் மாறுதல்கள் ஏற்பட்டால், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். உச்சத்தில் இருக்கும் புரொஜெஸ்ட்ரான் சுரப்பை இயல்புக்குக் கொண்டுவருவது உள்பட அதற்கான சிகிச்சையை அவர் வழங்குவார்.
35 வயதைக் கடந்த பெண்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தைராய்டு பரிசோதனை போன்றவற்றை வருடத்துக்கு ஒருமுறையாவது பரிசோதனை செய்துகொள்ளவும். தைராய்டு பிரச்னை இருந்தால்கூட உடல் சோர்வு, அடிக்கடி பசி எடுப்பது மற்றும் பசி குறைவது, படபடப்பு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் உடலுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை நீங்கள் அறிவதும் அதைச் சீர்படுத்தக் கவனம் கொடுப்பதும் அவசியம்.
No comments:
Post a Comment