Vitamin B12 Deficiency- வைட்டமின் பி12 குறைபாடு - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Tuesday, 13 March 2018

Vitamin B12 Deficiency- வைட்டமின் பி12 குறைபாடு


எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமை, சின்னதாக ஒரு வேலையைச் செய்தால்கூட உடல் சோர்வு, கொஞ்ச தூரம் நடந்தாலே கை, கால் மூட்டுகளில் வலி, அடிக்கடி ஓய்வெடுக்கத் தூண்டும் மனநிலை... இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் அதற்கு வைட்டமின் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம். நம் உடலின் ரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 மிக அவசியம்.

வைட்டமின்களில் நீரில் கரையக்கூடியவை, கொழுப்பில் கரையக்கூடியவை என இரண்டு வகைகள் உள்ளன. ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியவை. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை. வைட்டமின் பி-யில் பி1, பி6, பி7, பி 12 என நான்கு வகைகள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமான ஒன்று வைட்டமின் பி 12. இது 'சயனோகோபாலமின்' (Cyanocobalamin) என்றும் அழைக்கப்படுகிறது.

வைட்டமின் பி 12 அசைவ உணவுகளில்தான் அதிகமாகக் கிடைக்கிறது. சுவைக்காக இல்லையென்றாலும், உடல் ஆரோக்கியத்துக்காகவாவது அசைவ உணவுகளைச் சாப்பிடவேண்டியது அவசியம்.

"நம் உடலின் செல்களிலிருக்கும் டி.என்.ஏ-க்கள் வேலை செய்வதற்கும், ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும் வைட்டமின் பி12 மிக மிக அவசியம். இது நம் உடலின் வயிற்றுப் பகுதியில் இருந்துதான் உறிஞ்சப்படுகிறது. அதற்கு அமிலச் சுரப்பு (Acid secretion) அவசியத் தேவை. இந்த வைட்டமின் அசைவ உணவுகளில்தான் அதிகமாகக் கிடைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவே இருக்கிறது. எனவே, சைவ உணவுகள் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இந்தக் குறைபாடு கண்டிப்பாக ஏற்படும்.

யாருக்கெல்லாம் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்?

சைவ உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு, எடைக் குறைப்புக்காக அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, வாய்வுக் கோளாறு பிரச்னைகளுக்கு மாத்திரை, மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு, அதிகமாக விரதம் இருப்பவர்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படலாம். இது அதிகமாகும்போது `அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகைப் பிரச்னை, ஞாபகமறதி போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம்.

அறிகுறிகள்...
  • உடல் சோர்வு
  • வாய்ப்புண்
  • நாக்கு வெந்து சிவப்பாதல்
  • தோல் தொடர்பான பிரச்னைகள்
  • காதுகளில் சத்தம் வருதல்
இந்தக் குறைபாட்டை எப்படித் தடுக்கலாம்?

மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் பி 12 அதிகமாகக் கிடைக்கும். சைவ உணவுகளைப் பொறுத்தவரை சோயாபீன்ஸ், பால், தயிர் ஆகியவற்றில் ஓரளவுக்கு வைட்டமின் பி 12 கிடைக்கும். `வைட்டமின் பி12 சேர்த்த உணவுகள்’ (Vitamin B12 foods) என்று பிரத்யேகமாகவே விற்கப்படுகின்றன. இவை தவிர வைட்டமின் பி12 சத்துகள் நிறைந்த மாத்திரைகள், மருந்துகள் இருக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் வாங்கிச் சாப்பிடலாம். ஊசியாகவும் போட்டுக்கொள்ளலாம்.

வைட்டமின்கள், நம் உடலுக்குக் குறைபாடாகவும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில், தேவையைவிட அதிகமாகவும் இருக்கக் கூடாது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் தங்கினால் அவை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கிவிடும். ஆனால், வைட்டமின் பி 12-ஐப் பொறுத்தவரை அந்தப் பிரச்னையும் இல்லை. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், தேவைக்கு அதிகமாகக் கிடைத்தாலும், உடலில் தங்காமல் சிறுநீர் மூலமாகவோ வியர்வை மூலமாகவோ எளிதாக வெளியேறிவிடும்".


No comments:

Post a Comment

Post Top Ad