தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவியர் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு நிகராக உடல் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். எனவே, தேர்வு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும், தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றியும் பார்ப்போம்.
தினம் ஒரு பழம்
அந்தந்த சீசனில் மலிவாகக் கிடைக்கும் ஏதாவது ஒரு பழத்தை உணவு இடைவெளியில், சாப்பிடுவது நல்லது.
காலை உணவு கட்டாயம்
நேரம் தவறாமல் சாப்பிடுவதை மாணவர்கள் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.
ஹோட்டல் உணவு வேண்டாமே...
துரித உணவகங்கள், ஹோட்டல்களில் சாப்பிடும் உணவுகள் சுகாதாரமாக இருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. தேர்வுக் காலம் முடியும்வரையாவது ஹோட்டல் உணவுகளுக்கு குட்பை சொல்லிவிடுங்கள்.
அசைவ உணவுகள் இப்போது வேண்டவே வேண்டாம்.
தேர்வு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. இவ்வகை உணவுகளைச் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டால், அளவான மசாலா, குறைவான எண்ணெயில் செய்யப்பட்ட உணவாக இருக்க வேண்டும்.
நிறைய தண்ணீர் குடியுங்கள்..
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சோர்வு ஏற்படும்; கவனம் சிதறும். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுத்தால்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
குளிர் பானங்களுக்கு குட்பை..
தினமும் 2 டம்ளர் பால், தயிர், மோர் அருந்தலாம். இளநீர், காய்கறிகள் கலந்த சூப் அல்லது பழச்சாறு குடிப்பதும் நல்லது.
எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்..
பூரி, வடை போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளுக்குப் பதிலாக, சப்பாத்தி, இட்லி, புட்டு, இடியாப்பம் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடலாம்.
டீ, காபி தவிர்ப்போம்..
இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிப்பதற்காக டீயோ, காபியோ அடிக்கடி குடிப்பார்கள். இரவு மட்டுமல்ல, பகலிலும் சேர்த்துக் கண்டிப்பாக மூன்று கப்களுக்குமேல் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கவனமுடன் இரவு உணவு...
இரவு உணவில் கவனம் தேவை. செரிமானக் கோளாறு, மலச்சிக்கலைத் தவிர்க்க, எளிதாகச் செரிமானமாகும் உணவுகளை இரவில் சாப்பிடுங்கள்.
உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான், தேர்வுப் பாதையில் வெற்றி இலக்கை எட்ட முடியும். நம் உடல்தான் பயணத்துக்கான வாகனம். அதைச் சரியாகப் பராமரித்தால்தான், உங்கள் பயணம் தடையின்றி நினைத்த இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
வெற்றி உங்களுக்கே....
No comments:
Post a Comment